வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க நீலகிரியில் 'வனத்துறை பூத்'  அமைக்க இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமுள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘வனத்துறை பூத்துகளை’ அமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக ஒரு சிறுத்தைப் புலி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த டிச.21 அன்று சரிதா, துர்கா மற்றும் வள்ளியம்மாள் ஆகிய பெண்களை காயப்படுத்தியதாகவும், இதில் டிச.30 அன்று சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஜன.4 அன்று மாலை 4 மணியளவில், வீட்டருகில் நின்று கொண்டிருந்த கார்த்திகா என்ற 4 வயது குழந்தையை சிறுத்தைப் புலி தாக்கி இழுத்துச் செல்ல முயற்சித்த நிலையில் குழந்தையின் தாயும், அருகில் இருந்தவர்களும் கூச்சலிட்டுக் கத்தியதால், அந்த சிறுத்தைப் புலி குழந்தையை விட்டுவிட்டுச் சென்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பந்தலூர் பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மூன்றரை வயது பெண் குழந்தையை கடந்த ஜன.6 அன்று மாலை 5 மணியளவில் சிறுத்தைப் புலி இழுத்துச் சென்றதில் அப்பெண் குழந்தை இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாட்களுக்கு முன் பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தைப் புலியை மயக்க ஊசி போட்டுப் பிடித்த வனத் துறையினர், சென்னை வண்டலூருக்கு அப்புலியை அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அப்பகுதி மக்கள், பிடிபட்ட சிறுத்தைப் புலியைத் தவிர, மற்றொரு சிறுத்தைப் புலியின் நடமாட்டம் உள்ளதாகவும், அப்புலியை அப்பகுதி மக்கள் பார்த்ததாகவும் செய்திகள் தெரிய வந்துள்ளன.

எனவே, இந்த அரசு உடனடியாக தமிழக வனத் துறைக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி தற்போது மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடமாடி வரும் மற்றொரு சிறுத்தைப் புலியை உடனடியாகப் பிடித்து, அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி யானை, கரடி மற்றும் சிறுத்தைப் புலி போன்ற வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடுவதைத் தடுக்க வனத் துறை மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், நகரப் பகுதிகளில் போலீஸ் பூத் அமைத்து காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவது போன்று, நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமுள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘வனத்துறை பூத்துகளை’ அமைக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், வனவிலங்குகளின் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு, தற்போது வனத் துறை மூலம் வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தவும்; படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையுடன் 2 லட்சம் ரூபாயும்; காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையுடன் 50,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.