வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக, வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய வலியுறுத்தும் கேரளாவின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக, வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய, நடுநிலை நிபுணர் குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அணையின் பாதுகாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு தொடர்ந்து அதை கண்காணித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், அணை பாதுகாப்பானது என, தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எடுத்துச் செல்வதற்கு கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. உரிய அனுமதி வழங்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்.
கடந்த, 2021ல் அறிமுகம் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, அணை தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய வேண்டும். சட்டம் அறிமுகமானதில் இருந்து, ஐந்து ஆண்டுக்குள் இதை செய்ய வேண்டும். இதன்படி, 2026ம் ஆண்டு வரை அவகாசம் உள்ளது.
இதனால், நிபுணர் குழு ஆய்வுக்கு உத்தரவிடக் கோரும் கேரளாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement