'அயலான்' தெலுங்கு ரிலீஸ் சர்ச்சை : நமக்கும் பாதிக்கும் என வினியோகஸ்தர் அறிக்கை

ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'அயலான்' படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து அதேநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தராமல், தமிழிலிருந்து வரும் ஒரு டப்பிங் படத்திற்கு முக்கியத்துவம் தருவதா என திரையுலகில் சிலரும், மீடியாவில் சிலரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இதையடுத்து படத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனமான கங்கா என்டர்டெயின்மென்ட்டின் உரிமையாளர் மகேஷ்வர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிறுவனம் தெலுங்கில் 'விக்ரம், விவேகம், டாக்டர்' ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.

அதில், “அயலான்' படத்தை ஒரே நாளில் தெலுங்கு, தமிழில் வெளியிட நான்கு மாதங்கள் முன்பே அறிவிப்பு செய்திருந்தோம். இப்போது எழுந்துள்ள சர்ச்சையிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம். இது பற்றி அனைத்தையும் தெரிந்திருந்தும் சில மீடியாக்களில் வேண்டுமென்றே ஒரு தனிப்பட்ட நபரை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகம் தற்போது பான் இந்தியா, பான் உலகம் என வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட சில இணையதளங்களால் இது போன்ற சர்ச்சை எழுந்தால் தெலுங்கு திரையுலகிற்கு என்ன நடக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். இதனால், பக்கத்து மாநிலங்களில், மற்ற மொழிகளில் நமது படங்களுக்கும் சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் தெலுங்கு படங்களுக்கும் அங்கு கடும் எதிர்ப்புகள் உருவாகும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக அதிகமாகும்.

நமது தயாரிப்பாளர்கள் சிலரும் சர்ச்சைகளை அவர்களது படங்ளுக்கு பப்ளிசிட்டி ஸ்டன்ட் ஆக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

இது நமது திரையுலகத்திற்கும், அனைவருக்கும் நல்லதல்ல. என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என நான் ஆலோசனை சொல்லப் போவதில்லை. இந்த கோரிக்கை யாருக்கானதுமல்ல. எங்களது வேதனையைத் தெரிவித்துக் கொள்ள மட்டுமே இந்த அறிக்கை. இப்படி சர்ச்சைகளிலிருந்து விலகி நிற்கும் நண்பர்கள், மீடியாக்கள் சிலருக்கு எங்களது நன்றி. எல்லா நேரங்களிலும் சர்ச்சைகள் பலனளிக்காது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.