சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, அதன் மூலம் பழகுபவர்களை மோசடி செய்வது, காதலித்து ஏமாற்றுவது போன்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது. மும்பையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழகிய வங்கி மேலாளரை அவரின் காதலன் ஹோட்டல் அறையில் படுகொலை செய்துள்ளார். மும்பை சாக்கி நாக்கா போலீஸ் அதிகாரிக்கு அதிகாலை 2 மணிக்கு போலீஸ் உளவாளி ஒருவர் போன் செய்து ஒரு நபரின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து சென்று அந்த நபர் சொன்ன சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து சென்று போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சோயப் ஷேக்(24) என்று தெரிய வந்தது. அவர் நவிமும்பையில் உள்ள லாட்ஜில் காதலியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். உடனே மும்பை போலீஸார் நவிமும்பை துர்பே போலீஸாருக்கு தகவல் கொடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜில் சோதனை செய்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டனர். போலீஸார் சம்பந்தப்பட்ட லாட்ஜ் சென்று பார்த்த போது அங்கு அறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இது குறித்து துர்பே இன்ஸ்பெக்டர் ரவீந்திரா கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட பெண் அமித் கவுர்(34) வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். அவருக்கு ஷேக்குடன் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அமித் கவுருக்கு வேலை முடிந்தவுடன் அவரை ஷேக் அழைத்துச்சென்றுள்ளார். அவர்கள் ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்று அமித் கவுரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். பின்னர் அங்குள்ள லாட்ஜ் ஒன்றுக்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் ஷேக் மட்டும் புறப்பட்டு வெளியில் சென்றுள்ளார். அவரின் நடவடிக்கையில் லாட்ஜ் ஊழியர்களுக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படவில்லை. கொலை செய்த பிறகு நேராக சாக்கி நாக்காவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஷேக்கிடம் விசாரித்த போது அமித் கவுருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கொலை செய்ததாகவும், அமித் கவுர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருவரும் லாட்ஜ் அறையில் மகிழ்ச்சியாக இருந்த பிறகு இக்கொலை நடந்துள்ளது. திட்டமிட்டு இக்கொலையை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். கொலை செய்யப்பட்ட பெண் மும்பை சயான் கோலிவாடாவில் தனது தாயாருடன் வசித்து வந்தார். அவர் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார். மகள் அவரது கணவருடன் வசிக்கிறார்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.