தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கத்ரீனா கைஃப் உடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி தான் ஆடை அணியும் விதத்திற்காகச் சில விமர்சனங்களைச் சந்திப்பது உண்டு என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “சில சமயங்களில் ஆடைகள் அணிவதில் மிகவும் கவனமாக இருப்பேன். எனக்கு சௌகரியம் உள்ள ஆடைகளை அணிகிறேன். ஆனால் மக்கள் நான் வசதியாக இருக்கிறேன் என்பதை காட்டுகிறேன் என்று கூறுகிறார்கள். சில சமயங்களில் மிகவும் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். செருப்பு அணிந்து சென்றால் எளிமையாக இருக்கிறேன் என்று அர்த்தமா? நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு பலர் நன்றாக ஆடைகளை அணிந்து வருவார்கள். அப்போது நானும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் சில நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவே முயல்வேன்.
முன்னர் நிறைய பாடி ஷேமிங்கை எல்லாம் எதிர்கொண்டேன். ஆனால் தற்போது நான் எங்குச் சென்றாலும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அது ஒரு வரம். நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு நன்றி” என்றார்.

மேலும் பாலிவுட் பட வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “என்னிடம் தற்போது எந்தத் திட்டமும் இல்லை. நல்ல கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வருவார்கள். அதே சமயம் எந்தப் படங்கள் செய்தாலும் ரசிகர்களைச் சென்றைடைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.