பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி ரோஜா. இவர்களின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் (20). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். படிப்பு முடித்த இருவரும் திருப்பூரில் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை பிள்ளையார் கோவில் ஒன்றில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பல்லடம் அருகேயுள்ள வீரபாண்டியில் இருவரும் தங்கியிருந்தனர். இது குறித்த தகவல் பெருமாளுக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பெருமாள், ரோஜா மற்றும் உறவினர்கள் சிலருடன் கடந்த 2-ம் தேதி பல்லடம் சென்று தேடியுள்ளனர்.

இருவரையும் கண்டுபிடிக்க முடியாததால், பல்லடம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, நவீன் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பல்லடம் போலீஸார், முறையான நடவடிக்கை எடுக்காமல், ஐஸ்வர்யாவை மட்டும் பெற்றோருடன் அனுப்பியுள்ளனர். பெற்றோருடன் காரில் சென்ற ஐஸ்வர்யாவை பல்லடத்திலிருந்து நெய்வவிடுதி வரை தனி ஆளாக டூவீலரிலேயே தொடர்ந்து சென்றுள்ளார் நவீன்.
ஐஸ்வர்யா சென்ற கார் அவரது ஊருக்குள் சென்ற பிறகே, தன் ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் 3-ம் தேதி ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, போலீஸாருக்குத் தெரியப்படுத்தாமலேயே அவசர அவசரமாக, ஐஸ்வர்யாவின் உடலை எரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் பெற்றோர் அவரை துன்புறுத்தும் வீடியோ, அவருடைய உடலை எரிக்கும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டதால், அவரது பெற்றோர் அவரை அடித்து ஆணவக் கொலைசெய்துவிட்டதாகத் தகவல் பரவியது. “பெற்றோர் அழைக்க வந்தபோது, `நான் அவர்களுடன் சென்றால், என்னைக் கொலைசெய்துவிடுவார்கள். நான் போக மாட்டேன்’ எனக் கதறிய ஐஸ்வர்யாவை, போலீஸ் சொன்னதால் அனுப்பிவைத்தேன். இரண்டு பேரும் நூறு வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, திருமணம் செய்துகொண்டோம். ஆனால் தாலி கட்டிய மூன்றாவது நாளிலேயே ஐஸ்வர்யாவை அநியாயமாக கொன்று விட்டனர்” என நவீன் கதறியது, அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பாக நவீன் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக நவீன் வீட்டைச் சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். கொலை மற்றும் தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பெருமாள், ரோஜா மற்றும் சில உறவினர்களைக் கைதுசெய்து, தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் பெருமாள் மற்றும் ரோஜாவை போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா இருவரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் பட்டுக்கோட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பேசினோம், “ஐஸ்வர்யா ஆணவக் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதி, விசாரணை நடத்தினோம். இதில் அவரின் பெற்றோரே கொலைசெய்ததுடன், தடயங்களையும் மறைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” என்றனர்.