விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்கத் தயார் – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகனாக 'சகாப்தம்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அவரால் இன்னும் ஒரு கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை.

விஜயகாந்த் உச்சத்தில் இருந்த போது விஜய், சூர்யா ஆகியோரது படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உதவி செய்தார் என்பதை பலரும் நினைவு கூர்ந்தனர். அது போல விஜய் செய்திருக்க வேண்டும் என விஜயகாந்த் மறைவின் போது கூட சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கத் தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் தங்கை தன்னைப் பார்த்து “தம்பி ஹீரோவா பண்ணிட்டிருக்காரு, நீங்களாம்தான் பார்த்துக்கணும்,” என சொன்னார்கள். அது என்னை என்னவோ செய்தது, ஒரு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

நிறைய ஹீரோக்கள் நடிக்கிற படத்துல வந்து விஜயகாந்த் சார், கெஸ்ட் ரோல் பண்ணுவாரு, பைட் பண்ணுவாரு, சாங் பண்ணுவாரு. மத்தவங்களை வளர்த்து விடறதுல அவருக்கு ஒரு சந்தோஷம். நானும் அவர் கூட 'கண்ணுபடப் போகுதய்யா' படத்துல 'மூக்குத்தி முத்தழகு' படத்துக்கு நடனம் அமைச்சி கொடுத்திருக்கேன்.

அவர் பையன் படம் ரிலீஸ் ஆகும் போது இறங்கி பப்ளிசிட்டி பண்ணலாம்னு இருக்கேன். அந்த படக்குழுவினர் ஒத்துக்கிட்டாங்கன்னா, நான் பைட்டோ, சீனோ, சாங்கோ கெஸ்ட் ரோல்ல பண்ணலாம்னு இருக்கேன். யாராவது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் கூட சொல்லுங்க, சண்முக பாண்டியன் தம்பி கூட சேர்ந்து பண்ண தயாரா இருக்கேன். அவங்க குடும்பத்துக்கு நாம ஏதாவது பண்ணணும்னா இதுதான் பண்ணணும்னு தோணிச்சி, அதான் உங்க கூட ஷேர் பண்றேன்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.