புதுடெல்லி: “எனக்கும், என்னுடையக் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் தேவையில்லை. இது ஒரு மத நிகழ்வு அல்ல; முற்றிலும் அரசியல் சார்ந்த நிகழ்வு” என அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டை பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா இது குறித்து கூறும்போது, “மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். அயோத்திக்கு ‘தரிசனம்’ செய்வதற்காக யார் வேண்டுமானாலும் செல்லலாம். காங்கிரஸ் தனிப்பட்ட நம்பிக்கையை உயர்ந்ததாகக் கருதுகிறது. நாங்கள் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்குச் சென்றுள்ளோம், தனிப்பட்ட நம்பிக்கைகளின்படி தொடர்ந்து செல்வோம். பாஜக சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்துள்ளது. ஆனால், இப்போது அது ‘சனாதன தர்மத்தை’ பிரிக்க முயற்சிக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழா ஒரு மத நிகழ்வு அல்ல, அது ஓர் அரசியல் நிகழ்வு.
எனக்கும், என்னுடையக் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் தேவையில்லை. இடைத்தரகர்களாக செயல்படுவதை நான் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும். சங்கராச்சாரியார் உள்ளிட்ட மதத் தலைவர்கள் ராம நவமி அன்றுதான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால், 22-ஆம் தேதி விழாவை நடத்த வேண்டும் என முடிவு செய்தது எப்படி? எந்த பஞ்சாங்கத்தை வைத்து இதை முடிவு செய்தார்கள்? தேர்தலை மனதில் வைத்துதான் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மத நிகழ்வு அல்ல, முற்றிலும் அரசியல் சார்ந்த நிகழ்வு” எனத் தெரிவித்துள்ளார்.