மாலத்தீவின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது – சீனா

பீஜிங்,

சமீபத்தில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின்போது, பிரிஸ்டைன் பீச்சில் அவர் எடுத்த வீடியோவை பகிர்ந்ததற்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் சிலர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கான சுற்றுலா பயணங்களை ரத்து செய்தனர்.

தூதரக அளவிலும் இந்த விவகாரம் வெடித்தது. மாலத்தீவு தூதருக்கு இந்தியா சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே மாலத்தீவு அரசு, 3 துணை மந்திரிகளை பதவி நீக்கம் செய்திருந்தது. மாலத்தீவின் சுற்றுலா தொழிலுக்கான கூட்டமைப்பும் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் மிஜ்ஜு, சீனாவுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்குள்ள புஜியான் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சீனாவை நெருங்கிய கூட்டாளி எனவும், மாலத்தீவின் வளர்ச்சிக்கான நட்பு நாடுகளில் ஒன்று எனவும் கூறினார்.

மேலும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சீன அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து மிஜ்ஜு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவர்த்தையைத் தொடர்ந்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் கண்ணியம் நிலைநிறுத்தப்படுவதை சீனா ஆதரிக்கிறது. மாலத்தீவு அரசின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை மதிக்கிறது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.