சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (11) கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. எனினும், மழை காரணமாக, பல சந்தர்ப்பங்களில் போட்டியை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது. அதன்படி, மழை காரணமாக போட்டி 27 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
22 ஓவர்கள் 5 பந்துகள் முடிவில் சிம்பாப்வே அணியால் 96 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. காயத்திற்கு பின் சர்வதேச களத்திற்கு திரும்பிய வனிந்து ஹசரங்க, சிறப்பாக பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகரமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
97 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்படி தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.
போட்டியின் நாயகனாக புதுமுக வீரர் ஜனித் லியனகே தெரிவானதோடு, நேற்றைய (11) போட்டியின் நாயகனாக வனிது ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.