சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.