வங்காள விரிகுடாவில் 2016-ம் ஆண்டு, 29 பணியாளர்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஏ.என்-32 விமானம், திடீரென மாயமானது. அதைத் தேடும் பணிகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், விமானத்தின் சிதைவுகள் (பாகங்கள்), சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்திய விமானப் படை தெரிவித்திருக்கிறது. இது குறித்து, இந்திய விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

`ஜூலை 22, 2016 அன்று காலை 8 மணியளவில், IAF Antonov An-32, விமானம், சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயருக்கு வாராந்திர பயணமாகச் சென்ற இந்தப் போக்குவரத்து விமானத்தில், பணியாளர்கள் உட்பட 29 பேர் பயணித்தனர். இந்த விமானம் இந்திய கடற்படை விமான நிலையமான ஐ.என்.எஸ் உட்க்ரோஷில் தரையிறங்கவிருந்தது.
ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வங்காள விரிகுடா கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம், அனைத்து தொடர்புகளையும் இழந்து, ரேடாரில் இருந்து மாயமானது. அதைத் தொடர்ந்து, விமானத்தைத் தேடும் பணி, மீட்புப் பணியாக மாறி, தீவிரமடைந்தது. ஆனால், தேடுதல் பணி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15, 2016 அன்று, இந்திய விமானப்படை An-32 K2743 விமானத்தில் பயணித்த 29 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க தவறிவிட்டதாகவும், அதில் இருந்தவர்கள் இறந்துவிட்டதாகவும் அறிவிப்புக் கடிதத்தை அனுப்பியது.

இந்த நிலையில்தான், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 310 கி.மீ தொலைவில், கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிதைவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தக் கடல் பகுதியில் மீட்கப்பட்டவை ஆய்வு செய்யப்பட்டபோது, An-32 விமானத்துடன் ஒத்துப்போவது கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த விமானமும் மாயமானதாக எந்த அறிக்கையும் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, கிடைத்திருக்கும் சிதைந்த பாகங்கள், IAF An-32 (K-2743) விமானத்தினுடையது என்பது உறுதிசெய்யப்படுகிறது‘ எனக் குறிப்பிட்டிருக்கிறது.