புதுடில்லி:”மிகவும் துாய்மையான நகரங்களைத் தேர்வு செய்யும், ‘ஸ்வச் சர்வேக் ஷன்’ அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் டில்லி தன் தரவரிசையை மேம்படுத்தும்,” என, டில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் கூறினார்.
மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த, மேயர் ஷெல்லி ஓபராய் கூறியதாவது:
நாட்டின் மிகவும் துாய்மையான நகரங்களைத் தேர்ந்தெடுக்கும், ‘ஸ்வச் சர்வேக் ஷன் – 2023’ பட்டியலில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், டில்லி மாநகராட்சிக்கு, 28வது இடம் கிடைத்து உள்ளது.
அதே போல, 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, 446 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், டில்லி, 90வது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்று மாநகராட்சிகளாக இருந்த டில்லி, 2022ல் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன்பின், டில்லி மாநகரில் துாய்மைப் பணிக்கு, மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநகரின் மூலை முடுக்கெல்லாம், மாநகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, குப்பை அகற்றும் பணிகளை, தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
கடந்த, 2022-க்கு முன் இருந்த மூன்று மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பின், மத்திய அரசின் வருடாந்திர துாய்மைக் கணக்கெடுப்பில், டில்லி மாநகராட்சி பங்கேற்பது இதுவே முதன்முறை.
கடந்த, ‘ஸ்வச் சர்வேக் ஷன் – 2022’ல், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், வடக்கு டில்லி மாநகராட்சி, 37வது இடத்திலும், கிழக்கு டில்லி மாநகராட்சி, 34வது இடத்திலும், தெற்கு டில்லி மாநகராட்சி, 28வது இடத்திலும் இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2016 முதல் வழங்கப்படும், ‘ஸ்வச் சர்வேக் ஷன்’ விருதுகளின் 2023க்கான பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன் தினம் வெளியிட்டு, விருதுகளை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்