புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, குறைந்தபட்ச வெப்பநிலை, 3.9 டிகிரி செல்ஷியஸாக சரிந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட, மூன்று டிகிரி குறைவு என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது’ எனவும் கூறியுள்ளது.
கடுங்குளிர் காரணமாக டில்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவற்றிலும், மக்கள் கடுங்குளிரில் சிக்கித் தவிக்கின்றனர்.
சர்வதேச விமான நிலையம் அருகே, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, அடர்ந்த பனி நிலவியது. இதனால், சூழல் கண்ணுக்குப் புலப்படாத நிலை நிலவியது. அண்டை மாநிலங்களில் இருந்து டில்லிக்கு, 23 ரயில்கள், ஆறு மணி நேரம் வரை, தாமதமாக வந்தடைந்தன.
காலை 9:00 மணிக்கு, காற்றின் தரம் குறைவாக பதிவாகி இருந்தது. இது, மிக மோசமான நிலை என, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காலை 8:30 மணிக்கு, காற்றில் ஈரப்பதம், 100 சதவீதமாக இருந்தது.
பஞ்சாப், ஹரியானா
அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும், நேற்று கடுங்குளிர் நிலவியது. அடர்ந்த பனிமூட்டத்தால், வெப்பநிலை கடுமையாக சரிந்தது.
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், நேற்று குறைந்த பட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
பதிண்டா – 2, பரீத்கோட் – 2.8, குர்தாஸ்பூர் – 3, லுாதியானா – 4.6, பாட்டியாலா – 4.4, பதான் – 5.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
அதேபோல, ஹரியானாவின் நர்னோல் – 2.2, ஹிசார் – 2.6, ஜஜ்ஜார் – 3.1, பதேஹாபாத் – 3.2, கர்னால் – 4, பிவானி – 4.1, ரோஹ்தக் – 4.2, சிர்சா – 5, அம்பாலா – 5.4 செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் நேற்று, 5.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானிலும், அடர் பனிமூட்டம் நிலவுகிறது. மாநிலம் முழுதும் நேற்று, வறண்ட வானிலை காணப்பட்டது. சிகார் மாவட்டம் பதேபூரில், 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
சுரு மற்றும் பிலானி – 2.2, சிகார் – 2.5, கரவுலி – 2.9, சங்காரியா மற்றும் தோல்பூர் – 3, கங்கா நகர் – 4.1, பில்வாரா – 5.4, பனஸ்தாலி – 5.5, ஜெய்ப்பூர் – 7.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. ஆனால், லேசான மேகமூட்டம் காரணமாக, வெப்பநிலையில் சற்று, முன்னேற்றம் ஏற்பட்டது.
இருப்பினும், வரும் 17ம் தேதி வரை, உறைபனி நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரத்தில் ஸ்ரீநகரில் நேற்று, பகல் வெப்பநிலை, இந்த ஆண்டின் இயல்பை விட, 6 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவே பதிவாகி இருந்தது.
ஸ்ரீநகரில் நேற்று முன் தினம் இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை, மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காசிகுண்ட் – மைனஸ் 4.2, குல்மார்க் – 3.2, பஹல்காம் – மைனஸ் 5.3, கோக்கர்நாக் – மைனஸ் 2.4, குப்வாரா – மைனஸ் 4.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்