இன்ஸ்டா ரீல்ஸின் சமீபத்திய வைரல், தன் சோபா பிசினஸ் குறித்து புரொமோட் செய்யும் ஒரு சிறுவனின் கன்டென்ட்தான். பலரும் அவரின் ஆர்வத்தைப் பாராட்டினாலும், மற்றொரு தரப்பிலிருந்து வெறும் வியாபார நோக்குடனான அவரின் வீடியோக்கள் சில விமர்சனங்களைச் சந்தித்தன. அவரிடம் இது குறித்துப் பேசியதிலிருந்து…
“எங்கப்பா ஆரம்பத்துல சோபா, பெட் எல்லாம் கம்பெனிகளுக்கு சப்ளை செஞ்சுக்கிட்டிருந்தாரு. அதுல பேமெண்ட் எல்லாம் ஒழுங்கா வராது. அவர் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தாரு. அதனால் நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சேன். சும்மா ரீல்ஸ் பார்த்துக்கிட்டிருக்கும்போது இதேமாதிரி ரீல்ஸ் பண்ணி அப்பாவுக்கு வருமானத்தை ஏற்படுத்தலாம்னு முடிவு பண்ணினேன்.
முதலில் அப்பாதான் வீடியோ பேசினார். எதிர்பார்த்த அளவுக்கு போகல. அப்பறம் நான் வீடியோ பேசினேன். 1500 ரூபாயில் சோபான்னு பேசினேன். அந்த வீடியோ வைரல் ஆகிடுச்சு. என்னோட குரலும் மக்களுக்குப் புடிச்சிடுச்சு. இந்த அளவுக்கு நான் வைரல் ஆவேன், என்னை லைக் பண்ணி ஷேர் பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கல” என்று நெகிழ்ச்சியோடு பேசுகிறார் ‘Sofa Boy’ வைரல் சிறுவன் முகமது ரசூல்.
இதனைத் தொடர்ந்து அவருக்குப் படவாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. ரியாலிட்டி ஷோக்களிலும் தேடப்படும் நபராக இருக்கிறார்.
இதுகுறித்து அவரிடம் பேசும்போது, “நான் பண்ற வீடியோக்கள் பார்த்து கிரிக்கெட் வீரர் அஷ்வின் பாராட்டினார். அதுமட்டுமில்லாம, யாருமில்லாத நேரத்தில் கடைக்கு வந்து என்னையும் என் குடும்பத்தாரையும் மீட் பண்றதா சொல்லியிருக்காரு. அதேமாதிரி வி.ஜே அர்ச்சனா அக்கா, நடிகர் சந்தீப் கிஷன் எல்லாம் போன் பண்ணிப் பாராட்டினாங்க. விக்னேஷ் சிவன் சார் போன் பண்ணிப் பாராட்டினது மட்டுமில்லாம, நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அவரோட ‘எல்.ஐ.சி ‘படத்துல நடிக்கிறேன். அவரு எவ்ளோ பெரிய டைரக்டர். ஆனா, அவர் என்னோட பேன்னு சொன்னப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அதேமாதிரி, ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சாரோட படத்திலேயும் நடிக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நான், விஜய் சாரோட ஃபேன். அவரை எனக்கு ரொம்ப புடிக்கும். அவரோட நடிப்பு, டான்ஸ், ஸ்டைல் எல்லாமே பிடிக்கும். அவர் மாதிரி யாருக்கும் ஸ்டைல் வராது. அவரோட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தன். நடிகைகளில் நயன்தாரா மேடத்தைதான் ரொம்ப புடிக்கும். சூப்பரா நடிப்பாங்க. எனக்கு டாக்டர் ஆகணும்னு விருப்பம். சினிமாவுலேயே தொடர்ந்தேன்னா விஜய் சார் மாதிரி ஹீரோ ஆகணும்ங்குறதுதான் என்னோட ஆசை. கண்டிப்பா, ஆவேன்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் நம்பிக்கையுடன்.
அவரின் முழுமையான பேட்டியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.