வாஷிங்டன்: சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும், ஏமன் நாட்டில் இருந்து இயங்கி வரும் ஹவுதி பயங்கரவாத அமைப்பை குறி வைத்து, இரண்டாவது நாளாக நேற்றும், அமெரிக்கா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
சரக்கு கப்பல்
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது.
இதன் ஒரு பகுதியாக, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதியின் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செங்கடல் வழியாக செல்வதற்கு சரக்கு கப்பல்கள் தயக்கம் காட்டுவதால், சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்காக கூட்டணியை அமைத்துள்ளன.
போர்க்கப்பல்
இந்த சூழ்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்புக்கு சொந்தமான இடங்களை குறி வைத்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள், நேற்று முன்தினம் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டன.
போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் வாயிலாக இந்த ஏவுகணை தாக்குதல்களை இரு நாடுகளும் மேற்கொண்டன.
இதற்கு தகுந்த பதிலடி தரப்போவதாக ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘தாக்குதல்களை ஹவுதி நிறுத்தாவிட்டால், மிகப் பெரும் விலையை கொடுக்க நேரிடும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.
இரண்டாவது நாளாக நேற்றும், ஹவுதி அமைப்புக்கு சொந்தமான, ரேடார்களை குறி வைத்து, அமெரிக்கப் படையினர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பிராந்திய அளவிலான போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மாலுமிகள் மாயம்
ஹவுதி படையினரின் தாக்குதலை தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையினர், ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி, அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவைச் சேர்ந்த மாலுமிகள், அங்குள்ள போர்க்கப்பலுக்கு சென்றனர்.அப்போது, இரண்டு மாலுமிகள் மாயமானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர்களை தேடும் பணியை, அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்