அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “ஜனநாயக அமைப்பில், கட்சிகள், அரசை மேற்பார்வையிடும் கருவிகள் தானேயன்றி ஏதோ, தங்களுக்கே சொந்தமானதாக எண்ணி தாந்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நேற்றைய செய்திக்குறிப்பை அரசு திரும்ப பெறுவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக்கூடாது என்றும் தமிழிக அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது, என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை என்றும், கருணாநிதி உருவாக்கிய தனி கொள்கை என்றும், அண்ணாமலை கூறியது நகைப்புக்குரியது என்றும் பெரியார் காட்டிய பாதையில் தமிழக அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும் என்றும், அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழகத்தில் உருவாக வாய்ப்பு இல்லை என்றும் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. | முழுமையாக வாசிக்க > தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பே இல்லை – அண்ணாமலைக்கு தமிழக அரசு பதில்

மேற்கண்ட அறிக்கையை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு கொடுத்திருந்தால் அது சட்டவிரோதமானது. திமுக எனும் அரசியல் கட்சியின் அறிக்கையை விடுப்பதற்கு எந்தவிதமான அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். கடவுள் மறுப்பு என்பது ஈ.வெ.ராவின் கொள்கையாக இருந்தது. அதனால் இந்த அரசு கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுகிறது என்று கூறுமா? அப்படியானால் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆலயங்களை விட்டு அரசு வெளியேறுமா? ஈ.வெ.ராவுக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு?

அதேபோல் முதல்வராக இருந்த கருணாநிதி என்று குறிப்பிடலாமே அன்றி கலைஞர் என்ற அடைமொழியை அரசு பயன்படுத்தக்கூடாது என்ற விவரம் தெரியாமல் அறிக்கை வெளியிடுவது அரசு இயந்திரத்தை கட்சி கருவியாக மாற்றும் மக்கள் விரோத செயல். கட்சி வேறு, ஆட்சி வேறு என்று உணராமல் தமிழக அரசின் பெயரில் அறிக்கைகளை விடுப்பது திமுகவின், தமிழக அரசின் அராஜக செயல்பாடே. ஈ.வெ.ராவின் கொள்கை முற்போக்கு கொள்கை என்று அரசு சொல்வதற்கோ, பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்வதற்கோ எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை.

அரசுக்கு ஆலோசனைகளை, கருத்துக்களை, எண்ணங்களை சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்கிற நிலையில், தொழில்நுட்பம் சார்ந்து தமிழகத்துக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என்ற ஆணவ மொழியில் இந்த செய்தி அறிக்கையில் அரசு குறிப்பிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் உருவாகும். அந்தநாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்த அறிக்கையை வெளியிட்ட திமுகவின் இடைத்தரகு அரசு அதிகாரி உணரவேண்டும். எல்லோருக்கும் பொதுவமான அரசு ஒரு தனி மனிதரை தாக்குவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு என்பது தொடர்ந்து நடைபெறுவது. ஜனநாயக அமைப்பில், கட்சிகள், அரசை மேற்பார்வையிடும் கருவிகள் தானேயன்றி ஏதோ, தங்களுக்கே சொந்தமானதாக எண்ணி தாந்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நேற்றைய செய்திக்குறிப்பை அரசு திரும்ப பெறுவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவிக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.