காங்கிரஸில் இருந்து விலகினார் மிலிந்த் தியோரா: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா. தெற்கு மும்பை மக்களவை தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். இவரது தந்தை முரளி தியோராவும், இதேதொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர்.

வரும் மக்களவை தேர்தலில் தெற்கு மும்பையில் போட்டியிட மிலிந்த் தியோரா திட்டமிட்டிருந்தார். ஆனால், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரேதலைமையிலான சிவசேனா, தெற்கு மும்பை தொகுதியை கேட்டதால், அவர் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று வெளியேறி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மிலிந்த் தியோரா வெளியிட்ட அறிவிப்பில், ‘‘எனது அரசியல் பயணத்தில் இன்று முக்கியமான முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை நான் அளித்துள்ளேன். இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியுடன் எனது குடும்பத்துக்கு இருந்த 55ஆண்டுகால உறவு முடிவுக்குவந்துள்ளது. எனக்கு ஆதரவுஅளித்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘வளர்ச்சி பாதையில் செல்வதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினேன். முதல்வர் ஷிண்டே மக்களுக்காக பணியாற்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அவரது கரத்தை நான் பலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

மிலிந்த் தியோராவின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற மிலிந்த் தியோரா திட்டமிட்டிருந்தார். பிரதமர் மோடியின் முடிவால் அவர் தற்போது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மிலிந்த் தியோராவின்தந்தை முரளி தியோராவுடன் எனக்கு நீண்ட காலம் நெருங்கியநட்பு இருந்தது. அவருக்கு அனைத்து கட்சியிலும் நண்பர்கள்இருந்தார்கள். ஆனால், அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராகவே இருந்தார்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.