சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று விலகியது. வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனினும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து விலகியது.
வரும் 18, 19, 20-ம் தேதிகளில் தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.