நர்ஹர்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 700-க்கும்மேற்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு உதவி செய்த பெண்ணுக்கு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என ராம்ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழ் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷி துர்கா என்ற பெண்ணுக்கும் அழைப்பிதழ் கிடைத்துள்ளது. நர்ஹர்பூரில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 18 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய இவர் உதவியுள்ளார். இவரது பங்களிப்பை பல்வேறு அமைப்புகள் பாராட்டி பரிசு வழங்கி உள்ளன.
இதுகுறித்து துர்கா கூறும்போது, “அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் எனக்குக் கிடைத்துள்ளது. இதைப் பார்த்ததும் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. என் வாழ்நாளில் இதுபோன்ற அழைப்பு வரும் என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே இல்லை.எனக்கு அழைப்பிதழ் கிடைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 18-ம் தேதி அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். நர்ஹர்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என பிரார்த் தனை செய்வேன்” என்றார்.