IND vs AFG 2nd T20I Highlights: இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14 அன்று நடைபெற்ற இரண்டாவது டி20ல் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி பிளேயிங் 11ல் சில மாற்றங்களை செய்து இருந்தது. கில் மற்றும் திலக் வர்மாவிற்குப் பதிலாக விராட் கோஹ்லி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
#TeamIndia win the 2nd T20I by 6 wickets, take an unassailable lead of 2-0 in the series.
Scorecard – https://t.co/CWSAhSZc45 #INDvAFG@IDFCFIRSTBank pic.twitter.com/OQ10nOPFs7
— BCCI (@BCCI) January 14, 2024
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் அடித்து இருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பாடின் அரை சதம் அடித்து இருந்தார். இந்திய தரப்பில் அக்சார் படேல் 4 ஓவர்களில் 2 விக்கெட்களை வீழ்த்தி 17 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து இருந்தார். 173 ரன்கள் எடுத்தால் தொடரை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு விராட் கோலி சிறிது அதிரடி காட்ட 29 ரன்களுக்கு அவுட் ஆனார். பிறகு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் துபே அதிரடியில் இறங்கினர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்கள் அடிக்க, மறுபுறம் சிக்சர் துபே 32 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 63 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்மான் கில் ஏன் விளையாடவில்லை?
டாஸ் போடும் போது அல்லது பிசிசிஐ தரப்பில் இருந்து கில்லுக்கு காயம் போன்ற பிரச்சனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அணியின் காம்பினேஷன் காரணமாக கில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் விளையாடாத நிலையில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்வார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இடுப்பு வலி காரணமாக ஜெய்ஸ்வால் விளையாடவில்லை. இதனால் கில் ஓப்பனிங் செய்தார் மற்றும் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் விளையாடினார். முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் அவுட்டில் வெளியாக, கில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடிக்க தவறினார். ஜனவரி 2023ல் அறிமுகமானதில் இருந்து இதுவரை கில் மொத்தம் 14 டி20 போட்டிகளில் விளையாடி 25.77 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 335 ரன்கள் எடுத்துள்ளார்.