புதுடெல்லி: ஊழல் வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், இந்த வழக்கின் விசாரணையை 3 நீதீபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-17-ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், ஐகோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெல்லா திரிவேதி ஆகியோர் விசாரித்து வந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தீர்ப்புக்கான தேதி ஏதும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி போஸ் தனது தீர்ப்பில், ”முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கு முன் சட்டப்பிரிவு 17 ஏ-ன் கீழ் முன் அனுமதி பெறுவது அவசியம் என்றார். மாநில அரசானது ஆளுநரிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்” என்றார். ஆனால், இணை நீதிபதியான திரிவேதி, அத்தகைய அனுமதி தேவையில்லை என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தன் மீதான வழக்கு அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று கூறிவருகிறார். ஆந்திராவின் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார். ஆந்திர அரசியலில் காங்கிரஸ் மீண்டும் புது பாய்ச்சலுக்கு ஆயத்தமாகி வருகிறது.
அண்டை மாநிலமான தெலங்கானாவில் பெற்ற தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஆந்திர அரசியலில் எதிர்ப்பலைகளைப் பயன்படுத்தி ஜெகன் மோகனை வீழ்த்தி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில் சந்திரபாபு நாயுடு அரசியல் ரீதியாக முடக்கப்பட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் வழக்கிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தில் அவர் இருக்கிறார். அதனால், அவர் தரப்பு வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுவதை வரவேற்றுள்ளது.