வெளிவிவகார அமைச்சுடன் இணைந்த நிறுவனமான தேசிய சமுத்திர விவகாரங்கள் குறித்த குழுவுக்கான செயலகத்தின் நடவடிக்கைகள் பற்றி 2024.01.09ஆம் திகதி கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமைவகிக்கும் குறித்த குழு அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் தேசிய சமுத்திர விவகாரங்கள் குறித்த செயலகத்தின் செயற்பாடுகள், முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட குறித்த செயலகத்தின் தற்போதைய தலைவர் கலாநிதி.என்.பி விஜயானந்த குறிப்பிடுகையில், இந்நாட்டின் கரையோரத்தில் இருந்து 200 கடல்மைல் தொலைவில் உள்ள பொருளாதார வலயத்துக்கு அப்பால், மேலும் 250 கடல்மைல் தொலைவான கடற்பரப்பை இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் தொடர்பான சமவாயத்துக்கு அமைய பிராந்திய நாடுகளின் இணக்கப்பாடு அவசியம் என்றும், இந்தியா உட்பட பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் இது தொடர்பிலும் மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் ஆய்வு மற்றும் பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக கடல்சார் வலயம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
எனவே, பாதுகாப்பு அமைச்சையும் இணைத்துக் கொண்டு இந்த செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.