ஆன்லைன், ஆஃப்லைனில் மக்கள் கருத்துகளை பெற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கம்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: “வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார். அதன் தலைவராக நான் இருக்கிறேன். ஒருங்கிணைப்பாளராக சிங் தியோ இருக்கிறார். இக்குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இக்குழு ஏற்கெனவே இருமுறை கூடி ஆலோசித்திருக்கிறது. பணிகள் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் சில வாரங்கள்தான் உள்ளன. அதற்குள் மக்களின் கருத்துகளைப் பெற திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் கருத்துகளைப் பெருவதற்கான முதன்மைத் திட்டம், மக்களிடம் நேரடியாக கருத்துகளைப் பெறுவது. இதற்கான கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதற்கான பொறுப்பை ஏற்பார்கள். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களுக்கான பொறுப்பை ஏற்று, மக்களிடம் கருத்துகளைப் பெறுவதற்கான நாள், இடம் ஆகியவற்றை முடிவு செய்வார்கள்.

இதுமட்டுமின்றி மக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறுவதற்கான மேலும் இரு வழிகளை இன்று நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒன்று, இதற்காக https://awaazbharatki.in என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் சென்று அதில் உள்ள பிரிவுகளின்படி மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இரண்டாவது வழி, [email protected] என்ற இ-மெயில் ஐடி மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம்.

நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளை வழங்க நாங்கள் வரவேற்கிறோம். இ-மெயில் மூலம் வரும் கருத்துகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, அவற்றில் சொல்லப்பட்டுள்ள யோசனைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்யைில் மக்களை இணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, உண்மையான மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.