மதுரை: ஐபிஎல் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘‘நான் அடிக்கடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வந்துள்ளேன். ஜல்லிக்கட்டுப் போட்டி தடை செய்யப்பட்டபோது நடந்த மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்னர், நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகையே கவர்ந்துள்ளது. இந்த விளையாட்டை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். மெரினாவில் மக்கள் இந்த போட்டியை மீட்டுக்க போராடினாலும், அலங்காநல்லூர் வாடிவாசலில்தான் முதல் முறையாக போராட்டம் தொடங்கியது. முழுமையாக வாசிக்க > 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு, காயம் 83 பேர்… – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்
ஜன.24-ல் அரங்கம் திறப்பு: ஜல்லிக்கட்டு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக நான் இதைப் பார்க்கிறேன். இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கத்தை கட்டியுள்ளோம். இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போல் தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிய லீக் முறையில் இந்த ஜல்லிக்கட்டு அரங்கில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போட்டிகளில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக ஆலோசிப்போம்” என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.