`2023ல் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடியாக அதிகரித்துள்ளது’ என விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) குறிப்பிட்டுள்ளது.
டிஜிசிஏ வெளியிட்ட தரவுகளில், “வெளியூர் மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் கோவிட் சமயத்தில் முடக்கப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 2 மாதங்களுக்கு விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனால் 2020-ல் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 6.3 கோடியாகக் குறைந்தது. அதன்பின்னர் 2021-ல் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 8.4 கோடியாகவும், 2022-ல் 12.3 கோடியாகவும் உயர்ந்தது.
அதுவே கோவிட் பாதிப்புக்கு முன்னர் 2019-ல் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 14.4 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இதுவரை இல்லாத அளவிற்கு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2023-ல் 15.2 கோடியாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவையில் 2023-ல் இண்டிகோ நிறுவனம் 60.5 சதவிகிதப் பங்களிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது. டாடா குழுமத்துக்குச் சொந்தமான மூன்று விமான நிறுவனங்களான ஏர் இந்தியா 9.7 சதவிகிதமும், விஸ்தாரா 9.1 சதவிகிதமும், ஏஐஎக்ஸ் கனெக்ட் 7.2 சதவிகிதமும் கொண்டுள்ளன. இந்த மூன்று விமான நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு சேர்த்து 26 சதவிகிதத்துடன் டாடா குழுமம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் 5.5 சதவிகிதமும், ஆகாசா ஏர் 4.1 சதவிகிதமும், பிற நிறுவனங்கள் 3.9 சதவிகிதமும் கொண்டுள்ளன.
கடந்த மாதம் 3.6 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு பயணிகள் விமானச் சேவைகளில் தாமதங்களை எதிர்கொண்டுள்ளனர் என டிஜிசிஏ தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.