பெங்களூரு : கர்நாடகா சட்ட மேலவையில் காலியாக உள்ள, பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு பிப்ரவரி 16ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
கர்நாடகா சட்ட மேலவைக்கு, பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து, பா.ஜ., சார்பில் எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் புட்டண்ணா. இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த, கர்நாடக சட்டசபை தேர்தலில், பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., ‘சீட்’ எதிர்பார்த்தார்.
ஆனால், கிடைக்கவில்லை. இதனால் எம்.எல்.சி., பதவியை, கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி, ராஜினாமா செய்தார். காங்கிரசில் இணைந்து, ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். புட்டண்ணாவின் ராஜினாமாவால், பெங்களூரு ஆசிரியர் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தொகுதிக்கு, இந்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. பிப்ரவரி 16ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் இந்த மாதம் 30ம் தேதியும், மனு சரிபார்ப்பு 31ம் தேதியும் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள்.
காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 20ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. 23ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்டங்களை சேர்ந்த, ஆசிரியர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.சி., ஆகும் நபர், 2026 நவம்பர் 11ம் தேதி வரை, பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement