மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலாவிற்கு நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாட்டில் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலலிதாவின் விருப்பத்திற்குரிய ஓய்விடமாக கொடநாடு பங்களா விளங்கி வந்தது. பல சமயங்களில் கொடநாடு பங்களாவில் தங்கியபடியே அரசு மற்றும் கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தில் அவரின் தோழி சசிகலாவும் உடன் இருப்பார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா ஆகிய இரண்டுமே காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்தின்கீழ் இருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக, இன்று மாலை கொடநாடு வந்தடைந்தார் சசிகலா. தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் அ.ம.மு.க-வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கண்ணீர் மல்க கொடநாடு மக்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஓம் பகதூர் சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்று கொடுப்பார்.

மேலும், கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காகவும் வந்துள்ளேன். விரைவில் அவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டு, திறக்கப்படும். பிளவுபட்ட அ.தி.மு.க ஒன்றுபட தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றியடையும். அ.தி.மு.க ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது” என்றார்.