தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில், மத்திய உள்துறை அமித் ஷாவை நேரில் சந்தித்து, தமிழகத்துக்கு தேசியப் பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள். அன்றைய தினமே, ‘இப்படிச் செய்துவிட்டாரே பாலு?’ என்று சர்ச்சையாகிவிட்டது. காரணம், அந்தக் குழுவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் உள்ளிட்ட எட்டு எம்.பி-க்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தொகுதிகளின் எம்.பி-க்களான கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஞானதிரவியம் போன்றவர்கள் இல்லை. “மழை வெள்ள மீட்புப்பணிகளில் களத்திலிருந்த எம்.பி-க்களுக்குத்தானே தொகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தெரியும்… அனைத்துக் கட்சி எம்.பி-க்களை அழைத்துச் செல்வதாகச் சொல்லி, அமித் ஷாவுடனான சந்திப்பையே சொதப்பிவிட்டார் டி.ஆர்.பாலு” என்று குமுறுகிறார்கள் அறிவாலயத்துக்காரர்கள்!
சுடுகாட்டு மேற்கூரை ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் தேர்தல் அரசியலிலிருந்து விலகியிருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, விடுதலைக்குப் பிறகு சேலம் மக்களவைத் தொகுதியைக் குறிவைத்து தீயாக வேலை செய்கிறார். ஆனால், சேலம் சிட்டிங் எம்.பி-யான எஸ்.ஆர்.பார்த்திபன் தரப்போ, சேலத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கும் மனநிலையிலேயே இல்லையாம். தொகுதிக்காக செல்வகணபதி – பார்த்திபன் தரப்புக்கு இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டிருப்பதை அறிந்த தலைமைக் கழகம், ஒரு தூதரை அனுப்பி இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

சூரமங்கலம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ‘என் நீண்டகாலக் கனவு இது… விட்டுத்தர முடியாது’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் செல்வகணபதி. பார்த்திபன் தரப்பும் விட்டுத்தர மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இந்த முரண்பாட்டுக்கு மத்தியில் எப்படியாவது சேலம் தொகுதியை அ.தி.மு.க வசமாக்கிவிட வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்கிறது எடப்பாடி டீம்!
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது மாவட்ட போலீஸார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இது குறித்து விசாரித்தால், “குற்றச்சாட்டுக்கு ஆளாகும் `சோலை’ புள்ளி, வேலூர் மாவட்ட சீனியர் அமைச்சருக்குப் படு நெருக்கம். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இவரின் இடத்திலிருந்துதான் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதலானது. இந்த வழக்கு தற்போது தீவிரமடைந்துவருவதால், ‘சோலை’ வாயைத் திறந்தால் நமக்கு டேஞ்சர் ஆகிவிடும் என்று அமைச்சர் தரப்பு அவரைக் கண்போலப் பாதுகாக்கிறது. சீனியர் அமைச்சர் தரப்பின் பயத்தை முதலீடாகவைத்தே, வெயில் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் தொடங்கி பஞ்சமி நிலம் வரை வளைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார் `சோலை’ புள்ளி’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
டாலர் சிட்டியில் ‘மாநகராட்சி’ புள்ளியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடந்திருக்கிறது. விழாவுக்கு வந்த எல்.எல்.ஏ-வும், வடக்கு மாவட்டச் செயலாளருமான ‘வசதி’யான பிரமுகர், வந்ததும் வராததுமாக நேராக மாநகராட்சிப் புள்ளியிடம் சென்று, ‘விழா அழைப்பிதழில் ஏன் மாநகர மா.செ-வின் பெயரைப் போடவில்லை?’ என்று கேட்டுத் தகராறு செய்தாராம். அதற்கு, ‘விழா நடக்குது அண்ணா… அப்புறம் பேசலாம்’ என்றுச் சொல்லி ஒதுங்கிப்போனாராம் மாநகராட்சிப் புள்ளி. டென்ஷனான எம்.எல்.ஏ., மாநகராட்சிப் புள்ளியை மேடையில் வைத்தே அசிங்க அசிங்கமாகத் திட்டித் தீர்த்துவிட்டாராம்.
அதிர்ந்துபோன மாநகராட்சிப் புள்ளி, அவமானத்தில் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். “இன்னொருவர் பெயரைப் போடாததற்கா எம்.எல்.ஏ-வுக்கு இவ்வளவு கோபம்… ‘வணக்கத்துக்குரிய’வரை வண்டை வண்டையாகத் திட்டுகிறாரே?” என்று விசாரித்தால், “மாநகராட்சிப் புள்ளி புத்தாண்டுக்கு காலண்டர் அடித்தபோது, எம்.எல்.ஏ-வின் போட்டோவைப் போடாமல் விட்டுவிட்டார். அந்தக் கோபத்தை, இப்படிப் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டுத் தீர்த்திருக்கிறார் எம்.எல்.ஏ” என்று சிரிக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சார்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் தள்ளிப்போன அந்தக் கூட்டம் பிறகு நடக்கவேயில்லை. “என்னய்யா… ஒருவாட்டி கூட்டம் தள்ளிப்போனா, அப்புறம் நடத்தவே மாட்டீங்களா?” என்று தஞ்சை நிர்வாகிகளிடம் பேசும்போதெல்லாம் இது குறித்து தலைமை விசாரித்திருக்கிறது.

தலைமையை கூல் செய்யும்விதமாக ஜனவரி 18-ம் தேதி கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஏற்பாடு செய்து, எடப்பாடியை அழைத்திருக்கிறார்கள், தஞ்சை ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், ‘அதற்கு மறுநாள் தஞ்சையில் ஓ.பி.எஸ்-ஸும் ஒரு கூட்டம் நடத்துகிறார்… முதலில் ஏற்பாடு செய்ததும் அவர்தான்’ என்ற தகவல் எடப்பாடியின் காதுகளை எட்டியிருக்கிறது. “ஏன்யா… உங்களுக்கு வேற நாளே கிடைக்கலையா… அந்தாளுக்குப் போட்டிக் கூட்டம் நடத்த என்னையைக் கூப்பிடுறீங்களா?” என்று கடுப்பாகிவிட்டதாம் தலைமை. “என்னங்க இது… நிகழ்ச்சி நடத்தாமல் இருந்தாலும் திட்டுறாங்க… நடத்தினாலும் திட்டுறாங்க… நமக்கு நிகழ்ச்சியில கண்டம்போல” என்று புலம்புகிறார்கள் தஞ்சை அ.தி.மு.க நிர்வாகிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY