சாமானிய மக்களின் மனதில் ராமனின் வாழ்க்கையை நிலைநிறுத்தியவர் கம்பர்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

மயிலாடுதுறை: ‘ராமனின் வாழ்க்கையை, சாமானிய மக்களின் மனதில் நிலைநிறுத்தியவர் கம்பர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மனைவியுடன் நேற்று வந்தார். அவருக்கு மாவட்டஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படும், கம்பர்மேடு பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் ஆமருவி பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து கம்பர் மணிமண்டபத்தில் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்,இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்சார்பில் அங்கு நடந்த ‘அயோத்திராமனும், தமிழ் கம்பனும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிகழ்வில், திருவாரூர் மத்தியபல்கலைக்கழகத்தில் கம்பர் பெயரில் இருக்கை அமைக்க வேண்டும். கம்பர் பிறந்த தேரழுந்தூரில் ஆண்டுதோறும் மத்திய அரசுசார்பில் கம்பர் விழா நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பின்னர், கம்பர் புகழைப் பரப்பபெரும் பங்காற்றிய தேரழுந்தூரைச் சேர்ந்த 7 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி பேசியதாவது:

நாடு முழுவதும் ராம மயமாக,ராம பக்தி மயமாக காட்சியளிக்கிறது. ராமனின் வாழ்க்கையை, ராம நாமத்தை சாமானிய மக்களின் மனதுக்குள் புகுத்தி அடையாளப்படுத்தி, நிலை நிறுத்தியவர் கம்பர்.

பாரத தேசம் ராமராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் பகுதியில் கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தபெதிக உள்ளிட்ட கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.