இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்புக்கு சென்று வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது. முதல் சூப்பர் ஓவரில் ரிட்டையர்டு ஹர்டாகி வெளியே சென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் விளக்கமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோவில், “ரோகித் சர்மா முதல் சூப்பர் ஓவரில் ஆட்டம் இழக்கவில்லை. மாறாக ரிட்டையர்டு ஹர்டாகி வெளியே சென்றார். காயமடைந்திருந்தால் தவிர ஒரு வீரர் களத்தில் ரிட்டையர்டு ஆக வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கையில் ரோகித் திடீரென முதல் சூப்பர் ஓவரின் இறுதி பந்தில் ரிட்டையர்டு ஆகி சென்றுவிட்டார். ஆனால், இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாட ஓப்பனிங் இறங்கினார். இது விதிப்படி தவறு.
காயமடைந்தவராக இருந்தால் நிச்சயம் இரண்டாவது சூப்பர் ஓவரில் இறங்கி விளையாடி இருக்க முடியாது. அப்படி இருக்கையில் இந்த விதிகளை அவர் தவறாக பயன்படுத்தியிருக்கிறார். இந்திய அணி இதனை அனுமதித்திருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
மேலும், பேசிய ஆகாஷ் சோப்ரா, “ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் 3 ரன்கள் பை எடுத்தது தவறில்லை. சஞ்சு சாம்சன் வீசிய பந்து, நபியின் காலில் பட்டு ஓடியதால், ஆப்கானிஸ்தான் வீரர்கள் இரண்டு ரன்கள் கூடுதலாக ஓடி எடுத்தனர். இது குறித்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா உள்ளிட்டோர் புகார் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இடத்தில் இந்திய அணி வீரர்கள் இருந்தாலும் இதை செய்திருக்க மாட்டார்களா?. இதே உலக கோப்பையின் இறுதிப் போட்டியாக இருக்கும்பட்சத்தில், அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்படும்போது ஓடாமல் விட்டுவிடுவார்களா?. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ரன்கள் எடுத்ததில் எந்த தவறும் இல்லை. ” என்று கூறியுள்ளார்.