மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வாத்சல்யாபுரம் ஜெயின் அறக்கட்டளையால், ஆதரவற்றோர் இல்லம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதில், 21 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அந்த இல்லத்தில் சிறுவர்களுக்கு துஷ்பிரயோகம் நடப்பதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, காவல்துறையும், குழந்தைகள் நல அமைப்பும் அந்த குறிப்பிட்ட ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, அங்கு தங்கியிருந்த சிறுவர்களிடம் விசாரணையை மேற்கொண்டது. அதில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு செயல்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில், இந்த இல்லத்தில் ஆய்வை மேற்கொண்டோம். சிறுவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டோம். அப்போது சிறுவர்கள், ‘நாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கும் கடுமையாகத் தாக்கப்பட்டோம். தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு, பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பிகளால் சூடுவைக்கப்பட்டோம்.
காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு, அந்தப் புகை இருக்கும் அறையில் பூட்டப்பட்டோம்.’ எனக் குறிப்பிட்டார்கள். சிறுவர்களின் உடலில் பல இடங்களில் தழும்புகளும், காயங்களும் இருக்கின்றன. நான்கு வயது சிறுவன் ஒருவன் மூன்று நாள்களாக உணவு வழங்கப்படாமல், குளியலறையில் பூட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறான். இந்த விவகாரம் தொடர்பாக அந்த இல்லத்தின் 5 ஊழியர்களை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும், அந்த இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டு, சிறார்கள் மீட்கப்பட்டு அரசின் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்த வாத்சல்யாபுரம் ஜெயின் அறக்கட்டளைக்கு பெங்களூரு, சூரத், ஜோத்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்கள் இருக்கின்றன. அவற்றிலும் ஆய்வு நடத்தப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய இந்தூர் கூடுதல் காவல்துறை ஆணையர் அம்ரேந்திர சிங் ,“இந்த இல்லம் சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படவில்லை. சிறார்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் படங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தைகள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.