Nayanthara: `திரைப் பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்' – அன்னபூரணி படம் குறித்து நயன்தாரா அறிக்கை!

நயன்தாரா, ஜெய், கே. எஸ். ரவிகுமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் மேலும் பல நடிகர்கள் நடிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி அன்று “அன்னபூரணி” படம் திரையரங்குகளில் வெளியானது.

இது நயன்தாராவின் 75- ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. செஃப் ஆக வேண்டும் என்ற கனவோடு தனது குடும்பம் மற்றும் சமையல் துறையில் இருக்கும் சவால்களை எல்லாம் மீறி நயன்தாரா தன் கனவை அடைவாரா என்பதே இப்படத்தின் கதை. சமீபமாக இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மும்பையைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ் சோலாங்கி என்பவர் மும்பையில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து பல இந்து அமைப்புகள் இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணி

இந்த சரச்சைகள் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ஜெய் ஸ்ரீராம்….எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.

மற்றவர் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும, மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.