பிறந்த குழந்தையை பெற்றவர்களே அநாதரவாக விட்டுச் செல்லும் சம்பவங்கள் உலகம் முழுக்க நடந்துகொண்டே இருக்கின்றன. அரசு தொட்டில்கள் முதல் குப்பைத் தொட்டிகள் வரை அழுகைச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், கிழக்கு லண்டன் நியூஹாமில் கிரீன்வே மற்றும் ஹை ஸ்ட்ரீட் சவுத் சந்திப்பில், கைவிடப்பட்ட குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாயை வாக்கிங் கூட்டிச் சென்ற நபர் ஷாப்பிங் பேக்கில் டவலால் சுற்றப்பட்டு கிடந்த அந்தக் குழந்தையைக் கண்டிருக்கிறார். காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் அளித்து இருக்கிறார்.

பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலையில் குழந்தை இருந்ததால், போலீஸார் வரும் வரை குழந்தையை கதகதப்பாக, பத்திரமாக வைத்துள்ளார் அந்த நபர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்குத் தற்காலிகமாக `எல்சா’ எனப் பெயர் வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சிச் சுப்ட் க்ரிக் கூறுகையில், “நாயை வாக்கிங் கூட்டிச் சென்றவர், குழந்தை அழுவதைக் கேட்டிருக்கிறார். அவர் குழந்தையைப் போர்வையால் சுற்றி, குளிரிலிருந்து காத்து, கதகதப்பாக வைத்திருந்தது, குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
குழந்தை காயம் எதுவுமின்றி நலமாக இருக்கிறது. எல்சா கண்டுபிடிக்கப்பட்டபோது ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே பிறந்திருப்பாள் என்று நாங்கள் கணிக்கிறோம். எவ்வளவு நேரம் அந்தப் பகுதியில் இருந்தாள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

இப்போது எங்களுடைய எண்ணங்கள் குழந்தையின் தாயின் பக்கம் திரும்பியுள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அவருக்கும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும். அவர் ஒரு அதிர்ச்சியை எதிர்கொண்டு இருப்பார். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். அதனால், குழந்தையின் தாய் தொலைபேசி அல்லது அருகில் உள்ள காவல் துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். குழந்தையின் அம்மாவை பற்றித் தெரிந்தவர்களும் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
நியூஹாமில் குழந்தைகள் கைவிடப்படுவது ஒரு தொடர்கதையாகவே உள்ளது. பிப்ரவரி 2019-ல் பூங்காவில் ஒரு சிறுமியும், ஜனவரி 2020-ல் தெருவில் ஒரு ஆண் குழந்தையும் கைவிடப்பட்டு இருந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் எல்சாவோடு சேர்த்து நியூஹாமில் மூன்று கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.