மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா கூட்டணி’ கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சமீபத்தில் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. ஆரம்பத்தில் மக்களவைத் தேர்தலில் சிவசேனா 23 தொகுதியில் போட்டியிடும் என்று அக்கட்சி கூறிக்கொண்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் 18 தொகுதியில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
காங்கிரஸ் கட்சி 11 தொகுதியிலும் தேசியவாத காங்கிரஸ் 9 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்த சிவசேனாவின் சஞ்சய் ராவத்,” நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒவ்வொரு தொகுதி குறித்தும் விரிவாக விவாதித்தோம். மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலாவும் மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் சார்பாக சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். இச்சந்திப்பிற்கு பிறகு சல்மான் குர்ஷித் அளித்த பேட்டியில்,”பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 6 தொகுதிகள் கேட்டது. ஆனால் கமல்நாத் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த கோபம் அகிலேஷ் யாதவிற்கு இருந்து கொண்டிருக்கிறது. எனவே சொற்ப தொகுதிகள் குறிப்பாக 5 தொகுதிகள் வரை மட்டுமே கொடுப்பதாக சமாஜ்வாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு 10 தொகுதியாவது வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனது கட்சியால் மட்டுமே பா.ஜ.க. எதிர்த்து போட்டியிட முடியும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 தொகுதிகள் வேண்டுமானால் கொடுக்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் ஐந்து தொகுதிகளாவது கொடுங்கள் என்று காங்கிரஸ் கேட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் இவ்விவகாரத்தில் மிகவும் கறாராக இருக்கிறது. டெல்லியில் 4 தொகுதிகளும், பஞ்சாப்பில் 7 தொகுதியும் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் நாங்கள் தான் அதிக தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துவிட்டதாம். அதோடு கோவா, குஜராத், ஹரியானா மாநிலத்திலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி கூறிக்கொண்டிருக்கிறது.
பீகாரிலும் நிதீஷ் குமார் தங்களது கட்சி 17 தொகுதிக்கு குறைத்து போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 17 தொகுதி கேட்டுள்ளது. இதனால் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ஐந்து தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகாரில் தொகுதிக்காக கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திராவில் இந்த முறை முதல்வர் ஜெகன் மோகனுடன் அவரது சகோதரியை ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி மோதவிட்டுள்ளது.

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஷர்மிளாவை ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவராக காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது. கர்நாடகா, தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில்தான் காங்கிரஸ் கட்சிக்கு நிகரான எதிர்க்கட்சிகள் இல்லாமல் இருக்கிறது. எனவே இம்மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY