புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல்ஏர்பஸ் ஏ350 விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
நாட்டின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் இந்த அகன்ற விமானத்தை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்துவாங்கியுள்ளது. இதுகுறித்து இந்தநிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரி கேம்ப்பெல் வில்சன்கூறுகையில், “ஏர் இந்தியாவின் ஏ350 விமானம் தனது வணிகசேவையை 22-ம் தேதி தொடங்கும்.முதலில் இந்த விமானம் உள்நாட்டில் இயக்கப்படும். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும்” என்றார்.
ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 புதிய விமானங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 20 ஏ350 ரக விமானங்களும் அடங்கும். இந்த 20 விமானங்களில் முதல் விமானம் கடந்த திங்கட்கிழமை டெல்லியை வந்தடைந்தது. மேலும் 4 விமானங்கள் வரும் மார்ச் மாதம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல் ஏர்பஸ் ஏ350 விமானத்தை மத்திய அமைச்சர் ஜேதிராதித்ய சிந்தியா நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த விமானம் 3 வகுப்புகளுடன் 316 இருக்கைகளை கொண்டுள்ளது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ்நிறுவனத்தின் சக்தி வாய்ந்த, எரிபொருள் சிக்கனமான இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயல்திறன் மிகுந்த இதன் இன்ஜின்கள் சுற்றுச்சூழல் பலன்களையும் அளிக்க வல்லது. இந்த விமானம் பயணிகளுக்கு குறிப்பாக நீண்ட தூர பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை தரக்கூடியது.