Shivam Dube: டி20 உலக கோப்பையில் ஷிவம் துபே? டிராவிட் சொன்ன முக்கிய செய்தி!

Shivam Dube: ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்கு இந்தியா தயாராகி வருகிறது.  எனினும் சில முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.  ஒருநாள் உலக கோப்பை போட்டியின் போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா இன்னும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.  உலக கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் மிகவும் அரிதானவை, அதிலும் திறமையான வீரர்கள் கிடைப்பது அபூர்வம். கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணியில் உள்ள பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான்.  இருப்பினும், 2021 டி20 உலகக் கோப்பையில் முதுகில் ஏற்பட்ட காயத்துடன் ஹர்திக் போட்டியில் இருந்து விலகினார். பிறகு, கணுக்கால் காயம் காரணமாக 2023 ODI உலகக் கோப்பையில் இருந்து அவர் விலகினார். இது இந்திய அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  

இப்படி தொடர்ந்து ஹர்திக் காயத்தால் அவதிப்பட அவருக்கு மாற்று வீரரை பிசிசிஐ தேட முயற்சித்தது.  அதன் முதல் படியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஷிவம் துபேவை இந்தியா அறிமுகப்படுத்தியது. 2019ல் இந்தியாவிற்கு அறிமுகமான துபே மோசமான பார்ம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.  பின்பு, கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றார், ஆனால் ஐந்து போட்டிகளில் ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 தொடரிலும் துபே இடம் பெறவில்லை.  இந்நிலையில், ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய விளையாடும் கடைசி சர்வதேச தொடரில் இடம் பெற்றார் துபே.

ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய துபே, மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார்.  தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட துபே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரில் சிறப்பாக ஆடினார்.  தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்து மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் துபே தொடர் நாயகன் விருதையும் வென்றார். மேலும் பவுலிங்கில் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில், ஷிவம் துபேவின் இந்த ஆட்டம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசி உள்ளார்.  

“அவர் நிச்சயமாக தனது கையை உயர்த்தி, ‘இதோ நான் இருக்கிறேன், இவை என்னிடம் உள்ள திறமைகள், நீங்கள் அப்படி ஏதாவது தேடுகிறீர்களானால், எனக்கு இந்த திறன் கிடைத்துள்ளது’ என்று காட்டி உள்ளார். சுழலுக்கு எதிரான அந்த மிடில் ஓவர்கள் மூலம் அவர் சில நல்ல திறமைகளைப் பெற்றுள்ளார் என்பதை அவர் உண்மையில் எங்களுக்குக் காட்டினார். மேலும் பந்திலும் அவர் சில நல்ல ஓவர்களை வீசினார்” என்று டிராவிட் கூறினார். ஐபிஎல் 2024ல் துபே சிறப்பாக ஆடினாலும், இந்தியாவின் உலகக் கோப்பைக்கான முதல்-தேர்வு ஆல்-ரவுண்டராக ஹர்திக் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் ஷிவம் துபேவின் சிறந்த பார்ம் அவருக்கு நிச்சயம் வாய்ப்பை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.