மேட்டூர்: அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லிகுந்தம், சாத்தப்பாடி பகுதிகளில் மேச்சேரி ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை இன்று (ஜனவரி 21) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மல்லிகுந்தத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், அதிமுக கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் 2வது மாநில மாநாட்டை திமுக நடத்தி வருகிறது. 2 முறை மாநாட்டிற்கு தேதி குறித்து, நடத்த முடியாமல் 3ம் முறை தேதி குறித்து நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம், அதிமுகவின் கோட்டை சேலம் மாவட்டம். புரட்சி தலைவர், அம்மா ஆகியோர் இருக்கும் காலத்திலும், அவர்களின் மறைவுக்கு பிறகும் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம் மாவட்டம். இந்த கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியாது. நுழைந்தாலும் விரட்டி அடிக்க கூடிய சக்தி மக்களிடத்தில் உள்ளது.
அதிமுக மக்களுக்காக உருவாக்கிய கட்சி. திமுக வீட்டு மக்களுக்காக உருவாக்கிய கட்சி. அதிமுக நாட்டு மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்த நிறைவேற்றியது. 100 ஏரியை நிரப்பும் திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திட்டத்தை நிறுத்தியது. 7.5 சதவீத மருத்துவ உள் இட ஒதுக்கீட்டை சட்டத்தை நிறைவேற்றியது அதிமுக. 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக முடங்கி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நல்ல பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயாலார் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திசேகரன் எம்பி, ஒன்றிய செயலாளர்கள் செல்வம், சேகர் மற்றும் கட்சி உறுப்பினர்கள், மக்கள் உளிட்டோர் கலந்து கொண்டனர்.