மும்பையிலிருந்து அயோத்திக்கு 1,425 கி.மீ தூரம் நடைபயணமாகச் செல்லும் முஸ்லிம் பெண்

மும்பை: மும்பையிலிருந்து ராமர் கோயில் திறக்கப்படவுள்ள அயோத்திக்கு 1,425 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக முஸ்லிம் பெண் ஒருவர் சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் 1,425 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார்.

அவருடன் அவரது நண்பர்கள் ராமன்ராஜ் சர்மா, வினீத் பாண்டே ஆகியோர் சென்றுள்ளனர். நண்பர்களுடன் முஸ்லிம் பெண் ஒருவர் ராமர் கோயிலுக்கு நடைபயணமாகச் செல்வது தனிச் சிறப்பு பெற்றுள்ளது. பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷப்னம் கூறியதாவது: நான் முஸ்லிமாக இருந்தாலும், எனக்கு ராமர் மீது அவளது அசைக்க முடியாத பக்தி. ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நல்ல மனிதனாக இருப்பதுதான் முக்கியம். தற்போது தினமும் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறேன். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்தவா பகுதியில் தற்போது உள்ளேன்.

இதை நம்பிக்கையின் பயணமாக நாங்கள் பார்க்கிறோம். ராமர் மீது நாங்கள் வைத்துள்ள பக்தியால்தான் இவ்வளவு தூரம் நடந்து வந்துள்ளோம். எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் செய்திகள் குவிந்து வருகின்றன.

வழியில் எங்களைப் பார்க்கும் சிலர், இதுகுறித்து விசாரித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். சாதி, மத, இன பேதமின்றி அவர் பொதுவாக இருக்கிறார்.

இதுபோன்ற ஆன்மிக நடைபயணத்தை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள் என்ற கருத்து உள்ளது. அதை உடைத்து நான் பயணம் மேற்கொண்டுள்ளேன்.

எங்களுக்கு பல இடங்களில் போலீஸாரும், பொதுமக்களும் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் அளித்து உதவி புரிந்தனர். மகாராஷ்டிராவின் பதற்றம் மிகுந்த பல இடங்களில் போலீஸார் எங்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.

சில சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான கருத்துகள் வருகின்றன. ஆனால் எங்களுக்கு வரும் அதிக அளவிலான நேர்மறையான கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. எனவே, எதிர்மறையான கருத்துகளை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காவிக் கொடியுடன் அவர் நடைபயணத்தை மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வழியில் எதிர்படும் மக்கள் அவருக்கு ஜெய் ஸ்ரீராம் என்று கூறி வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். இதில் முஸ்லிம் மக்களும் அடங்கும். விரைவில் அவர் அயோத்தியை சென்றடையவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.