புதுடெல்லி: ஸ்ரீ ராம ஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வில் இடம்பெற்றிருந்த தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 5 நீதிபதிகளுக்கு ராமர் கோயில் பிரதிஷ்டைக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமஜென்மபூமி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு வழங்கிய தீா்ப்பில், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், முஸ்லிம்கள் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவும் உத்தர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அமர்வில் இடம்பெற்ற தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளுக்கு ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமர் கோயில் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.கே.வேணுகோபால், முகுல் ரோத்தகி ஆகியோரும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.
இதேபோல் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க உத்தர பிரதேச அரசு சார்பில் பல்துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறை சார்பில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அக்சய் குமார், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மலையாள நடிகர் மோகன் லால், அனுபம் கெர், சீரஞ்சிவி, இயக்குநர்கள் சஞ்சய் பன்சாலி, சந்திரபிரகாஷ் திவேதி ஆகியோருக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.