அயோத்தியில் நாளை திறக்கப்பட உள்ள ராமர் கோயில் விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் 2 நாள்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். இதற்கென நேற்று காலை திருச்சி வந்த பிரதமர், அங்குள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று ரங்கநாதரை தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் ராமேஸ்வரம் வருகை தந்த மோடி, இங்குள்ள அக்னி தீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். இதனை தொடர்ந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கு நடந்த ராமகாதை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார் மோடி. அங்கு பலவண்ண பூக்களை தூவி, சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டார். பின்னர் ராமர், விபீஷணருக்கு இலங்கையின் மன்னனாக பட்டம் சூட்டிய கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்து அங்கு சிறப்பு பூஜை செய்தார். அங்கிருந்து புனித தீர்த்தங்களுடன் புறப்பட்ட பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து டெல்லி சென்றார்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் பாம்பன் பாலத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர் காங்கிரஸ் பிரிவின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மற்றும் நிர்வாகிகள் ரவி, ரோவன் தல்மேதா, சகாயராஜ் உள்ளிட்ட சிலர் கைகளில் மோடிக்கு எதிரான பதாகைகளுடன் கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY