மும்பை போலீஸில் பணியாற்றி வந்தவர் லலித் சால்வே (36). தற்போது சாம்பாஜி நகரில் காவலராகப் பணிபுரியும் இவர், சில வருடங்களுக்கு முன் தன் பாலின அடையாளத்தை ஆணாக உணர ஆரம்பித்தார். காவல்துறையில் பணியில் சேர்ந்தபோது பெண்ணாக பாலியல் அடையாளம் கொண்டிருந்த லலித், 2017-ம் தனக்கு மரபியல் சோதனை செய்துகொண்டார். அதில், அவர் ஆண் என்பது உறுதியானது. இதையடுத்து, தான் ஆணாக மாற பாலின சிகிச்சை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி மும்பை போலீஸில் மனு கொடுத்தார். மும்பை போலீஸார் அனுமதி கொடுக்காத நிலையில், இதற்காக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

2018-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம், லலித் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். தொடந்து, இரண்டு ஆண்டுகள் மரபியல் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
2019-ம் ஆண்டு சீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் லலித். லலித் மனைவிக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து லலித் சால்வே கூறுகையில், ”எங்களது வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் திருமணம் செய்தபோது சீமாவின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.’’ என்று தெரிவித்துள்ளார்.
லலித் சால்வேக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரஜத் கபூர் இது குறித்து கூறுகையில், ”சால்வேக்கு குழந்தை பிறந்திருந்தாலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைவருக்கும் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட முடியாது. சால்வேக்கு பிறப்பிலேயே சிறிய ஆணுப்பு இருந்தது. அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தோம். இது அவர் குழந்தை பெற வசதியாக இருந்தது” என்று தெரிவித்தார்.