எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் ஜனவரி 17-ம் தேதி நடைபெற்றது. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ‘பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வராக வருவது இலவுகாத்த கிளி கதையைப் போன்று. தமிழ்நாட்டில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும்போது, தாமரை மலர்வது நடக்காது. அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக இருக்கின்றன. ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை’ என்றார் ஜெயக்குமார்.
இந்த விவகாரத்தை முதலில் ஆரம்பித்தவர் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. சமீபத்தில் சென்னையில் துக்ளக் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய எஸ்.குருமூர்த்தி, ‘நடிகர் ரஜினிகாந்த்தை நான் சந்தித்தபோது, நீங்கள் முதலமைச்சராக விருப்பமில்லை என்கிறீர்கள், வேறு யார் முதலமைச்சராக வரக்கூடும் என்று கேட்டேன். அதற்கு, அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார் ரஜினிகாந்த் கூறினார்’ என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்குத்தான் ‘ஓடாத காளை’ என்றும், ‘இலவுகாத்த கிளி’ என்றும் சாடினார் ஜெயக்குமார். இது குறித்து கோவை விமானநிலையத்தில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ’முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரையில், முதல்வராவதற்கான தகுதியுள்ள பல தலைவர்கள் பா.ஜ.க-வில் இருக்கிறார்கள்’ என்றார்.
மேலும், ‘முதல்வராக வேண்டும் என்கிற கனவு எனக்கு இல்லை. கட்சியை வளர்ப்பதும், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதும்தான் என்னுடைய வேலை’ என்றார் அண்ணாமலை.

தமிழக பா.ஜ.க-வில் முதல்வராகும் தகுதியுள்ளவர்கள் என்று யாரையெல்லாம் அண்ணாமலையே நினைக்கிறார் என்பது தெரியவில்லை. முன்னாள் மாநிலத் தலைவரான எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர்கள் இராம.ஸ்ரீநிவாசன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, சசிகலா புஷ்பா, கரு.நாகராஜன், மாநிலச்செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா, தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினர் குஷ்பு உட்பட தமிழக பா.ஜ.க-வில் பலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரை குறிப்பிட்டு முதல்வராகும் தகுதியுள்ள தலைவர் என்று அண்ணாமலை சொல்கிறார் என்பது தெரியவில்லை. யாரை அண்ணாமலை சொல்கிறார் என்பதை வெளிப்படையாகப் பேச பா.ஜ.க வட்டாரத்தில் தயங்குகிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் என்ன? கடைசியாக தேர்தலில் தனித்துப்போட்டியிட்டபோது, பா.ஜ.க பெற்ற வாக்குகள் வெறும் மூன்று சதவிகிதம்தான். இப்போது, ‘நாங்கள் வளர்ந்துவிட்டோம் மம்மி… வளர்ந்துவிட்டோம் மம்மி..’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.

அவர்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறதா என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும். மேலும், பா.ஜ.க தனியாக நிற்கப்போகிறதா, அல்லது, கூட்டணியுடன் நிற்கப்போகிறதா என்பது தெரிய வேண்டும். தனித்து நின்றால்தான் அதன் உண்மையான பலம் தெரியவரும். ஒருவேளை, ஒன்றிரண்டு சதவிகித வாக்குகள் அதிகரித்திருந்தாலும்கூட, அதன் காரணமாக பா.ஜ.க-வால் ஆளுங்கட்சியாக வந்துவிட முடியாது.
எனவே, ‘எனக்கு முதல்வர் ஆசை கிடையாது. எங்கள் கட்சியில் முதல்வராவதற்கான தகுதி கொண்டவர்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. எப்படியோ 2031-ல் ஆளுங்கட்சியாக பா.ஜ.க வருகிறது என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, அண்ணாமலையைத்தான் முதல்வர் நாற்காலியில் பா.ஜ.க மேலிடம் உட்கார வைக்கும் என்று சொல்ல முடியாது.

மேலிருந்து ஆட்களைத் திணிப்பார்கள். நிர்மலா சீதாராமன் போன்றவர்களைத் திணிப்பார்கள். முதலில் போட்டிபோடுவதற்கான களம் கைவசமாகாதபோது, தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவது மாதிரியான சூழல் இருந்து சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்” என்கிறார் ப்ரியன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY