பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை

பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் ஒழுக்க மீறல் சம்பவங்களின் போது, அது தொடர்பான விசாரணைகள் கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவான விசாரணைகளுக்கு சபாநாயகர் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், எந்த விதத்திலும் அதில் தலையிடுவதோ அல்லது செல்வாக்குச் செலுத்துவதோ இல்லை எனவும் குஷானி ரோஹணதீர வலியுறுத்தினார். 

 

இதற்கு முன்னர் ஒருசில பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தாலும், அது தொடர்பாக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு மிகவும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அந்த விசாரணை அறிக்கை தற்போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டத்தை அமுல்படுத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

 

இந்தத் துன்புறுத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளியாகும் செய்தியும் முற்றிலும் பொய்யானது என்றும், அவ்வாறான கடிதமொன்று இதுவரை எதிர்க்கட்சித் தலைவருக்குக் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் உறுதி செய்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

பாராளுமன்ற செயலகத்தின் தலைமை பொறுப்பான செயலாளர் நயாகப் பதவியை ஒரு பெண்ணாகிய தான் வகிப்பதும், பாராளுமன்றத்தில் பல திணைக்களங்களின் தலைவர்களாக வருவதற்கு பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதும், பெண்களுக்குத் தமது கடமைகளை எந்தவித செல்வாக்கு மற்றும் துன்புறுத்தல்கள் இன்றி மேற்கொள்வதற்கான சூழல் மற்றும் கலாசாரம் பாராளுமன்றத்துக்குள் இருப்பதே என செயலாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார். 

 

இவ்வாறான நிலையில், இலங்கை பாராளுமன்றம் மற்றும் கௌரவ சபாநாயகர் ஆகியோரின் நற்பெயருக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் முற்றிலும் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் அடிப்படையற்ற தகவல்கள் வெளியிடப்படுவது தொடர்பில் மிகவும் வருந்துவதாகவும், அவ்வாறான செய்திகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.