India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இதன் அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்ட நிலையில், அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு ரசிகர்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் ஏற்கெனவே 16 பேர் கொண்ட இந்திய அணி (Team India) அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மிடில் ஆர்டர் பேட்டரான விராட் கோலி விலகியிருப்பதால் அவருக்கு மாற்று வீரரை விரைவில் ஆடவர் அணிக்கான தேர்வுக்குழு அறிவிக்கும் எனவும் ஜெய் ஷா தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை ஈடுசெய்ய இயலாத வீரர்கள் இன்னும் கண்டடையவில்லை என்றாலும், இந்திய மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்த பல வீரர்கள் இருக்கின்றனர். எனவே, இதனால் புஜாரா மற்றும் ரஹானே மீண்டும் அணியில் இடம் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை தேர்வுக்குழு கணக்கில் எடுக்கும் வாய்ப்பு மிக குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக யார் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் இதில் காணலாம்.
சர்ஃபராஸ் கான்
இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பேட்டருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக பேட்டர் விலகினாலோ முதலில் ரசிகர்களிடமும், கிரிக்கெட் வல்லுநர்களிடமும் இருந்து வரும் பெயர் சர்ஃபராஸ் கானாகதான் இருக்க முடியும். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இவரால் விராட் கோலியின் வெற்றிடத்தை நிச்சயம் நிரப்ப முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இவரின் முதல் தர போட்டிகளின் சராசரி 68.20 ஆக உள்ளது. சமீபத்தில், நடந்த இங்கிலாந்து லயன்ஸ் உடனான பயிற்சி போட்டியில் 96 ரன்களையும், அந்த அணியுடனான அதிகாரப்பூர்வ டெஸ்ட போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அபிமன்யூ ஈஸ்வரன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அந்த தொடரில் அவருக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் உடனான டெஸ்ட் போட்டியில் பெரிய ஸ்கோரை அடிக்காவிட்டாலும், முதல் தர போட்டிகளில் இவரும் நல்ல ரன்களை வைத்துள்ளார்.
ராஜத் பட்டீதர்
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இவரும் சதம் அடித்து மிரட்டியிருந்தார். மற்ற இருவரை விட இவர் தற்போது பார்மில் உள்ளார் எனலாம். சமீபத்தில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாயிருந்த இவர் இம்முறை விராட் கோலிக்கு மாற்று வீரராக வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.