அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் டெர்ரி மெக்கர்த்தி. அப்போது அவனுக்கு 6 வயது. வழக்கம்போல தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனிலிருந்த மண்ணெண்ணெய் அவன்மீது சிதறியிருக்கிறது. அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான் டெர்ரி மெக்கர்த்தி. திடீரென அவனது உடலில் தீப்பற்றியது.
அதுவரை ஆரோக்கியமாக, அழகான தோற்றத்துடன் விளையாடிக்கொண்டிருந்த டெர்ரி மெக்கர்த்தியின் உடலில் பற்றிய தீ, 70 சதவிகிதம் அவனைத் தின்றுவிட்டது. கடுமையான தீக்காயங்களுடன் அவனுடைய பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவனது உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் மருத்துவர்கள், “டெர்ரி மெக்கர்த்திக்கு 70 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.
முகம், உடல், கை, கால்களில் சதைகள் சிதைந்துவிட்டது. இனி சாதாரண குழந்தைகளைப்போல இயல்பாக அவனால் இயங்க முடியாது. சாதாரண வேலை, படிப்பது போன்ற செயல்பாடுகளில் மற்ற மாணவர்களோடு ஒப்பிடும்போது திறன் குறைந்து, மந்தத்தன்மையில் இருப்பான். எனவே, அவனை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்” என அவனுடைய பெற்றோருக்கு அதிர்ச்சித் தகவலைக் கொடுத்தார்கள்.

சிகிச்சை முடிந்தும் அவனால், மற்றவர்கள்போல் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. சக நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, உறவினர்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு, படிப்பில் சோர்வு போன்ற காரணங்களால் தன்னுடைய இயல்பான உலகிலிருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டான் டெர்ரி மெக்கர்த்தி. அதனால், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்த டெர்ரி மெக்கர்த்தி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.
நாள்கள் கடந்தது. தனிமையில் தன்னையே நொந்து கொள்ளாமல், இந்த துரதிஷ்டத்திலிருந்து எப்படியாவது முன்னேறிச் சாதித்து விட வேண்டும். எந்த நெருப்பால் தன் வாழ்க்கை சூனியமாக்கப்பட்டதோ, அந்த நெருப்பிலிருந்து தன்னையும், தன்னைப்போலப் பாதிக்கப்படுபவர்களையும் மீட்க வேண்டும் என்ற முனைப்புடன், அது தொடர்பான படிப்புகளைத் தேடித் தேடிப் படித்தான்.
தற்போது டெர்ரி மெக்கர்த்திக்கு 26 வயது. அவரின் கடுமையான உழைப்பால், இப்போது அவர் பணி செய்வது தீயணைப்புத் துறையில். எந்தத் தீ தன்னை பயமுறுத்தியதோ, மூலையில் முடக்கியதோ அந்தத் தீயுடன் தற்போது போராடி, மக்களை மீட்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு அசத்தி வருகிறார். அவர் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.