ஆண்டுதோறும் ராம நவமி நாளில் 6 நிமிடம் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழும்

அயோத்தி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் சூரிய திலகம் என்ற இயந்திர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ராம நவமி நாளில் நண்பகல் 12 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் பொட்டு வைப்பது போல சுமார் 6 நிமிடங்கள் சூரிய ஒளி விழுவதை இந்த முறை உறுதி செய்கிறது.

இதற்காக சூரியனின் பாதை உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியை பெங்களூருவில் உள்ள இந்திய வான் இயற்பியல் மையம் வழங்கி உள்ளது.

கோயிலின் மூன்றாவது மாடியில் கியர்பாக்ஸ் மற்றும் உயர்தரமான ஆப்டிகல் லென்ஸ் பொருத்தப்படும். அங்கிருந்து பித்தளையால் ஆன குழாய் தரைதளத்தில் உள்ள கருவறை வரை பொருத்தப்படும். லென்ஸில் படும் சூரிய ஒளி, குழாயில் உள்ள தொடர் பிரதிபலிப்பான்கள் மூலம் கருவறைக்கு திசை திருப்பப்படும். இதன்மூலம் அங்குள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும். சூரிய பாதையை கண்டறியும் கொள்கை மூலம் இது செயல்படும். இதற்கு மின்சாரம், பேட்டரி, இரும்பு உள்ளிட்ட எதுவும் தேவையில்லை. எனினும் அடுத்த 19 ஆண்டுக்கு இது செயல்படும்.

மேலும், ராமர் கோயில் கட்டுமானத்தின் தொடக்க நிலையில், ரூர்க்கியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் – மத்திய கட்டுமான ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ) முக்கிய பங்களித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ, அடித்தள வடிவமைப்பு மற்றும் நிலநடுக்க பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல ஐஐடிகள் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் விண்வெளி தொழில்நுட்ப நிபுணத்துவம் இந்த ராமர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெங்களூருவில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை-இந்திய வான் இயற்பியல் மையம் (டிஎஸ்டி-ஐஐஏ) மற்றும் பாலம்பூரில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஎச்பிடி (இமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜி) ஆகிய அரசு நிறுவனங்களும் ராமர் கோயில் கட்டுமானத்தில் உதவி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.