புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஜன.23) அறிவித்தார். கர்பூரி தாக்கூர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னம் விருது வழங்கப்படுகிறது. கர்பூரி தாக்கூர் பிப்ரவரி 17, 1988ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கர்பூரி தாக்கூரை புகழும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “சமூக நீதியின் கலங்கரை விளக்கமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்பதில் உறுதியானவராக இருந்த அவரது நீடித்த முயற்சிகளுக்கு சான்றாகும்” என்று பாராட்டியுள்ளார்.
பலரால் “ஜன் நாயக்” என்று அழைக்கப்பட்ட கர்பூரி தாக்கூர் பிஹார் மாநிலத்தின் முதலமைச்சராக டிசம்பர் 1970 முதல் ஜூன் 1971 வரை மற்றும் டிசம்பர் 1977 முதல் ஏப்ரல் 1979 வரை பணியாற்றினார்.
மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1977 – 1979 இடையே பிஹார் முதல்வராக இருந்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் ஓபிசி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக, இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்றளவும் அறியப்படுகிற தலைவர் கர்பூரி தாக்கூர்.
இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது அம்மாநில தலைவர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தநிலையில் அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.