Canada Study Visa Cut Affects Indians | கனடா கல்வி விசாவில் கட் இந்தியர்களுக்கு பாதிப்பு

ஒட்டாவா, விலைவாசி உயர்வு மற்றும் வீடுகளுக்கான தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் விசாவை குறைக்கும் முடிவை கனடா எடுத்து உள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதில், இந்தியா முன்னிலையில் உள்ளது.

கடந்த, 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில், 260 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில், தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்பதற்காக கனடா சென்றுள்ளனர். கடந்த, 2021ல், ௧.௨௭ லட்சம் பேரும், 2022ம் ஆண்டில், 1.18 லட்சம் பேரும் சென்றுள்ளனர்.

கனடாவில் கடந்தாண்டு, 5.60 லட்சம் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

மேலும், வாடகைக்கு வீடு கிடைப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. போதிய அளவில் வீடுகள் இல்லாதது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

இதையடுத்து, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் அளவைக் குறைக்க கனடா முடிவு செய்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுக்கு இந்த விசா குறைப்பு அமலில் இருக்கும் என, அந்த நாட்டின் குடியேற்றுமைத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டில், 35 சதவீதம் அளவுக்கு கல்வி விசா குறைக்கப்பட்டு, 3.64 லட்சம் விசாக்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளன.

வரும், 2025ம் ஆண்டுக்கான எண்ணிக்கை தொடர்பாக, இந்தாண்டு இறுதியில் முடிவு செய்யப்படும் என, அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளார்.

கனடா அரசின் இந்த முடிவு, அங்கு படிப்பதற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.