Team India, Virat Kohli Replacement in IND vs ENG Test Series: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series) வரும் ஜன.25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் மார்ச் மாத முதல் வாரத்தில் நிறைவடையும். இதன்பின்னரே, ஐபிஎல் தொடர் (IPL 2024) தொடங்கும் எனலாம். இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் உள்ளது.
ஐபிஎல் தொடர் ஒருபுறம் இருக்க, வரும் டி20 உலகக் கோப்பை வரை (ஜூலை வரை) இந்திய அணி விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மாற்று வீரர் யார்?
அந்த வகையில், இங்கிலாந்து தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரரை (Virat Kohli Replacement) விரைவில் அறிவிக்கும் என பிசிசிஐ நேற்றைய அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இருப்பினும், இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விராட் கோலி மிடில் ஆர்டரில் வலுவான வீரராக இருந்த நிலையில், அவரை ஒத்த வீரர்களை இணங்காணுவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
மீண்டும் புஜாரா அல்லது ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா இல்லையெனில் சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ரின்கு சிங், ரஜத் பட்டிதார் (Rajat Patidar) ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்குமா என பலரும் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏன் படிக்கலை எடுக்கக் கூடாது?
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்டர் ஆகோஷ் சோப்ரா (Aakash Chopra) கூறுகையில்,”நான் ஒரு இடது கை ஆட்டக்காரரை முன்வைக்கிறேன் – தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal). அவர் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று நான் சொல்கிறேன். ஆனால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதால் அவர் இப்போது தற்போதே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். அவர் சமீபத்தில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் வேறு லெவலில் பேட்டிங் செய்கிறார். அவர் பேட்டிங்கின் எந்த இடத்தில் இறங்கினாலும் ரன்களை குவிக்கிறார்.
அவர் ஒரு சிறப்பான வீரர், சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து சிறப்பாக விளையாடுகிறார். அவர் மூன்று வடிவத்திற்குமான வீரராக உள்ளார். கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு ஒன்றரை ஆண்டுகளாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. பிறகு, தற்போது 2023 ஐபிஎல் (IPL 2023) தொடருக்கு பின் அவர் ரன்கள் குவிக்காத இடமே இல்லை. அப்படியானால் ஏன் தேவ்தத் படிக்கலை எடுக்கக் கூடாது?.
ரஜத் படிதரும்…
ரஜத் படிதாரின் ஆட்டங்கள் அற்புதமானவை. காயம் காரணமாக இடையிடையே ஐபிஎல் தொடரை அவர் தவறவிட்டார், ஆனால் அதன்பிறகு, அவர் திரும்பி வந்து ரன்கள் குவித்தார். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்.
நிறைய பேர் இவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே பார்த்திருப்பார்கள், அதனால் ஐபிஎல் கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால் ஐபிஎல் போட்டிகளையும் தவிர்த்து பார்க்க வேண்டும். இவர் முதல்தர கிரிக்கெட் ஸ்டைலில் விளையாடுகிறார். அதனால் ரஜத் படிதாரையும் பரிந்துரைப்பேன். என் மனதில், ஒரு மிடில் ஆர்டர் பேட்டர் இங்கே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தோன்றுகிறது” என்றார்.
குறிப்பாக, ரோஹித் – ஜெய்ஸ்வால் – கில் – ஷ்ரேயாஸ் – கேஎல் ராகுல் – அஸ்வின் – ஜடேஜா என பேட்டிங் ஓரளவுக்கு பலமாக இருந்தாலும், இரண்டு ஸ்பின்னர், மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் போகும்பட்சத்தில் இந்தியாவுக்கு மிடிலில் ஒரு பேட்டர் கிடைத்தால் நன்றாக இருக்கும். அக்சர் படேல் நல்ல ஆல்ரவுண்டர்தான் என்றாலும் ஒரு பேட்டர் மிடில் ஆர்டரில் சேர்ந்துகொண்டால் பேட்டிங்கும் வலுபெறும். மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படும்பட்சத்தில் பழைய பார்முலாவே போதுமானது.